அட்டகாசமான ருசியில் முட்டை குருமா செய்யும் முறை உங்களுக்காக!!!

அட்டகாசமான ருசியில் சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை ஆகிய அனைத்திற்கும் ஏற்ற முட்டை குருமா எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை- 4
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 1
பட்டை- 2
கிராம்பு- 4
ஏலக்காய்- 4
சோம்பு- 1/2 தேக்கரண்டி
மிளகு- 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 3/4 தேக்கரண்டி
சீரகத் தூள்- 3/4 தேக்கரண்டி
மல்லி தூள்- ஒரு தேக்கரண்டி
புதினா- ஒரு கையளவு
கொத்தமல்லி தழை- ஒரு கையளவு
தயிர்- 1/4 கப்
முந்திரி பருப்பு- 10
இஞ்சி- ஒரு இன்ச் அளவு
பூண்டு- 4 பல்
நெய்- 2 தேக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை: முட்டை குருமா செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் 1/2 தேக்கரண்டி சோம்பு, 1/2 தேக்கரண்டி மிளகு, 4 ஏலக்காய், 4 கிராம்பு, 2 துண்டு பட்டை, நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் ஒரு கையளவு புதினா, ஒரு கையளவு கொத்தமல்லி தழை, ஒரு நறுக்கிய தக்காளி சேர்த்து கொள்ளவும். தக்காளி குழைய வெந்த பிறகு 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 3/4 தேக்கரண்டி மிளகாய் தூள், 3/4 தேக்கரண்டி சீரகத் தூள், ஒரு தேக்கரண்டி மல்லி தூள் மற்றும் 1/4 கப் தயிர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பிறகு இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கூடவே 10 முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளலாம். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி ஒரு இன்ச் அளவு இஞ்சி மற்றும் நான்கு பல் பூண்டினை நசுக்கி சேர்த்து கொள்ளவும். அடுத்து நான்கு வேக வைத்த முட்டையை ‘X’ வடிவத்தில் வெட்டி அதனை நெய்யில் இரண்டு நிமிடங்கள் வறுத்து கொள்ளலாம்.

பிறகு நாம் அரைத்து வைத்த கலவையை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 10 – 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியில் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். அருமையான சுவையில் முட்டை குருமா ரெடி.