சத்து நிறைந்த சுவையான பச்சை பட்டாணி மோதகம்!

பச்சை பட்டாணி சத்து நிறைந்த உணவாகும். இன்று நாம் பச்சை பட்டாணி சேர்த்து மோதகம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அரிசி மாவு-1கப்,
தண்ணீர்-தேவையான அளவு,
ஏலக்காய்-சிறிதளவு,
நெய், உப்பு- சிறிதளவு,
மசித்த பச்சைப்பட்டாணி-1½ கப்,
துருவிய வெல்லம்-½ கப்,
கசகசா, முந்திரி, ஜாதிக்காய், சிறிதளவு.

செய்முறை
தண்ணீரைக் கொதிக்க வைத்து உப்பை போட்டு அதில் அரிசி மாவைப் போட்டு கிளறி மிருதுவான பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது ஆறியதும் நெய் சேர்த்துப் பிசைந்து தனியாக மூடி வைக்கவும். அதே போல் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் மசித்த பட்டாணி, வெல்லம் மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய் தூள், கசகசா, முந்திரி இவற்றைப் போட்டுக் கிளறி ஓரளவு கெட்டிப் பதத்தில் இறக்கி வைக்கவும்.

பின்பு மோதக அச்சில் நெய் தடவி அதில் கொழுக்கட்டை மாவைத் தடவி அதனுள்ளே பூரணத்தை நிரப்பி அழுத்தி எடுத்தால் அருமையான மோதகங்கள் தயார். இவற்றை இட்லிப் பாத்திரத்திலோ அல்லது ஸ்டீமரிலோ வைத்துப் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். வெந்த பிறகு மோதகங்களை ஒவ்வொன்றாக எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.