ஜவ்வரிசி உப்புமா வெங்காய சட்னி செய்வோம் வாங்க

சென்னை: ஜவ்வரிசி உப்புமாவும் வெங்காயச் சட்னியும் செய்து பார்த்து சாப்பிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களை பாராட்டுவார்கள்.

தேவையானவை: ஜவ்வரிசி 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், வறுத்த வேர்க்கடலை தலா ஒரு கப், பச்சைமிளகாய் 1, துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொட்டுக்கடலை 2 டீஸ்பூன், கொத்தமல்லி சிறிதளவு, விருப்பப்பட்டால் நெய் 1 டீஸ்பூன், எலுமிச்சம்பழம் அரை மூடி.

செய்முறை: ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு வெங்காயம், பொட்டுக்கடலை, இஞ்சி, கேரட் துருவல், வேர்க்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்துமல்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

வெங்காயச் சட்னி: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 10 சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்துச் சேர்த்து வதக்கவும். 2 காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடுகு தாளித்து நன்றாகக் கலக்கவும்.