நவராத்திரி ஸ்பெஷலாக வித்தியாசமான முறையில் மொச்சை சுண்டல் செய்முறை

சென்னை: நவராத்திரி என்றாலே அனைவருக்கும் சுண்டல்தான் ஞாபகத்திற்கு வரும். அதில் ஒன்றுதான் மொச்சை சுண்டல். அதை சூப்பர் சுவையில் செய்து பார்ப்போம் வாங்க.
தேவையானவை: மொச்சை – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது), மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவைகேற்ப, தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன், எலுமிச்சை பழம் சாறு – அரை டீஸ்பூன்.

பொடி செய்ய: புதினா – ஒரு கைப் பிடி, ஓமம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு. ஓமம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து, பின், புதினா சேர்த்து லேசாக வதக்கி பொடி செய்து கொள்ளவும்.

தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை– சிறிதளவு

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு, வேகவைத்த மொச்சை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் போட்டு மூன்று நிமிடம் கிளறவும். பின், பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும். அருமையான ருசியில் மொச்சை சுண்டல் ரெடி.