ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் வெஜிடபிள் ஆம்லேட் செய்முறை

ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் வெஜிடபிள் ஆம்லேட் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். காலை நேர சிற்றுண்டியைச் சாப்பிடாமல் இருப்பது நம்மில் பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் பத்து மணிக்கு மேல் பசியெடுக்கும்போது மைதா மற்றும் உடம்புக்கு ஒவ்வாத மாவில் செய்த சமோசா, பஜ்ஜி, பக்கோடா போன்றவற்றைச் சாப்பிட பிடிக்கும்.

இவற்றைத் தவிர்த்து, ஊட்டச்சத்துகளை அள்ளித்தருகிற குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றதான இந்த வெஜிடபிள் ஆம்லெட்டைத் தயாரித்து சாப்பிடலாம்.

செய்முறை: தலா 50 கிராம் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து, ரவை போல அரைத்துக்கொள்ளவும்.

தேவைப்படும்போது, தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். இதனுடன் இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் ஒன்று, சிறிதளவு கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு சோத்து ஆம்லெட் போல தோசைக்கல்லில் போட்டு எடுத்துச் சூடாகச் சாப்பிடலாம்.

பயன்: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப் பருப்பு, முந்திரி அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. மக்காச்சோளம், முழு கோதுமை போன்றவற்றில் இருந்து நார்ச்சத்து கிடைக்கிறது. பச்சை மிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றில் இருந்து நுண் ஊட்டச்சத்துகளும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் கிடைக்கின்றன. இவை அனைத்தும் புத்துணர்ச்சியைத் தரும்.