உடலுக்கு ஆரோக்கியம், புத்துணர்வு தரும் வேர்க்கடலை கீர்

வேர்க்கடலையை கீர் ஆக செய்து சாப்பிட்டு பாருங்கள். உடலுக்கும் ஆரோக்கியம். சுவையும் அருமையாக இருக்கும். அனைத்துத் தரப்பினரும் வாங்கிப் பயன்படுத்தும் அளவிலான விலை, இதில் அடங்கியுள்ள ஏராளமான சத்துகள் ஆகிய காரணங்களால், வேர்க்கடலை உலகெங்கும் எளியவர்களின் உணவாகத் திகழ்கிறது.

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் வேர்க்கடலையை வறுத்தோ, வேகவைத்தோ மட்டும்தான் சாப்பிட வேண்டுமா. கீராகவும் பருகலாம்.

செய்முறை: மிக்ஸியில் அரை கப் பச்சை வேர்க்கடலையைச் சிறிது தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு சூடானதும் அரைத்த வேர்க்கடலை விழுதைச் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி இதனுடன் இரண்டு கப் தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும்.

பிறகு அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து கலவையில் சிறிதளவு ஏலக்காய்த்தூள், கால் கப் கண்டன்ஸ்டு மில்க் அல்லது அரை கப் காய்ச்சிய பால் சேர்த்துக் கிளறவும். பிறகு இதில் 10 நிமிடங்கள் ஊறவைத்து அரைத்த முந்திரிப்பருப்பு விழுது ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறி, தோல் நீக்கி வறுத்து உடைத்த வேர்க்கடலையைத் தூவி அடுப்பை நிறுத்தவும்.

இதை சூடாகவும் பருகலாம். ஆறவைத்து ஃப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.

பயன்கள்: வேர்க்கடலையில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, வைட்டமின்கள், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மேங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், ஃபோலிக் ஆசிட் உட்பட ஏராளமான சத்துகள் உள்ளன. இவை ஆரோக்கியத்துடன் புத்துணர்ச்சியைத் தரும்.