எலும்புகளை வலுவாக்க உதவும் மரவள்ளிக்கிழங்கு தோசை

சென்னை: மரவள்ளி கிழங்கு தோசை சுவையானது மற்றும் எளிமையானது. சுலபமாக செய்யகூடிய எளிய உணவாக இருந்தாலும் சத்தானது. மரவள்ளிக் கிழங்கில் நம் உடல்ஆரோக்கியத்துக்கு தேவையான ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன.

மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகின்றன. செரிமான மண்டலத்தை சீராக்கி, மென்மையான குடல்இயக்கத்துக்கு வழிவகுக்கிறது.

மரவள்ளிகிழங்குகளில் இருக்கும் வைட்டமின் கே மற்றும் கால்சியம் ஆகியவை எலும்புகளை வலுவாக்குகின்றன.

மரவள்ளிக்கிழங்கு தோசை செய்ய தேவையானவை:
மரவள்ளி கிழங்கு- 250 கிராம்,பச்சரிசி -250 கிராம்,வெந்தயம்- 1 டீஸ்பூன்,சீரகம்- 1 டீஸ்பூன்,பச்சை மிளகாய்-3,ஆயில் & உப்பு - தேவையான அளவு

செய்முறை: பச்சரிசியை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். மரவள்ளி கிழங்கு தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஊற வைத்த அரிசியுடன் வெந்தயத்துடன், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். மரவள்ளிக்கிழங்கை தனியே அரைத்து இந்த மாவுடன் உப்பு சேர்த்து கலக்கவும்.
அதிக நேரம் புளிக்க வைக்கத் தேவையில்லை 2- 3மணி நேரம் புளிக்க வைத்தால் போதும். பின்பு இதை தோசை மாவு பதத்திற்கு கரைத்து அடுப்பில் தோசைக் கல் வைத்துஅது நன்கு சூடான பிறகு எண்ணெய் விட்டு தோசை வார்த்து சூடாகப் பரிமாறவும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

எல்லா வகையான சட்னிகள், இட்லிப் பொடி, எள்ளுப்பொடி அனைத்தும் இதற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

இந்த மாவிலேயே வெஜிடபிள் கேரட் ,கோஸ் ,பீன்ஸ் சேர்த்து தோசை, ஆனியன் தோசை, தக்காளி தோசை என வெரைட்டியாக செய்யலாம். இந்த தோசைக்கு சைட்டிஷ் சாம்பார் சட்னி பொடி வகைகள் சூப்பராக இருக்கும்.