வீட்டிலேயே மலாயா லோட்டஸ் ஸ்வீட் செய்து பாருங்கள்

சென்னை: மலாயா லோட்டஸ் ஸ்வீட் செய்வது எப்படி என்று பலரும் அறிந்து இருக்க மாட்டார்கள். இதோ அதன் செய்முறை உங்களுக்காக!!!

தேவையானவை: பால் - 1 லிட்டர், சர்க்கரை - அரை கிலோ, பால்கோவா - கால் கிலோ, ஏலக்காய்த்தூள், லெமன் பவுடர் - தலா அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார், மைதா மாவு கலவை - 10 கிராம், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடாயில் நூறு மில்லி பாலை விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் சர்க்கரையை சேர்த்து மெதுவாகக் கிளறினால், ஜீரா ரெடி!


மீதமுள்ள பாலைக் காய்ச்சி, ஒருமுறை கொதித்ததும் இறக்கி, அதில் சிறிது தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்க்க... பால் திரிந்து விடும். வெண்மையான மெல்லிய துணியில் அதைக் கொட்டி 2 முறை வடிகட்டவும். அதிலுள்ள நீர்ச்சத்து போனதும், அப்படியே பேப்பரில் பரப்பவும்.


இதில் ஏலக்காய்த்தூள், கார்ன்ஃப்ளார் - மைதா மாவு கலவை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். இந்த மாவை உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து தட்டி சிறு அப்பளமாக இடவும்.
தயார் செய்து வைத்திருக்கும் ஜீராவை மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், அதில் கொஞ்சம் மாவுக் கலவையை சேர்க்கவும். நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அப்பளம் போல் வட்டமாக செய்துள்ளவற்றை ஒவ்வொன்றாக அதில் போட... நன்றாக உப்பி வரும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கவும். பால்கோவாவில் லெமன் பவுடர் கலந்தால் அது மஞ்சளாகிவிடும்.


அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு ஜீராவில் ஊறிய அப்பளங்களை எடுத்து அதன் நடுவில் கட் செய்து, பால்கோவா மிக்ஸை அதனுள் ஸ்ட்ஃப் செய்யவும். தேவைப்பட்டால், சில்வர் ஃபாயில், ஜாம், பிஸ்தா பருப்பு, செர்ரி பழம் பயன்படுத்தி அழகுபடுத்தலாம். அருமையான சுவையில் இருக்கும்.