பெற்றோர்கள் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது எப்படி ?

குழந்தை வளர்ப்புக்கு ஷார்ட் கட் ஏதும் இல்லை. அம்மாவாக அப்பாவாகக் குழந்தைகளுடன் உடன் இருந்து பழகி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லி தப்பித்தவறி நமக்குத் தெரிந்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களை சிம்பிளாக சொல்லிக்கொடுத்து சுதந்திரமாக வளர்த்தால் போதும். குழந்தைகளைத் திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது என்றெல்லாம் நவீன குழந்தை வளர்ப்பு பிதாமகர்கள் அறிவியல்பூர்வமாக அறிவுரை சொல்லி வருகிறார்கள்.

எல்லாம் நன்றாக இருந்து சொர்க்கபூமியாக இருந்தால் அடிக்காமல், திட்டாமல் இருக்கலாம். அப்படியா இருக்கிறது நிலைமை? நம்மால் ஏற்படும் கெட்ட பழக்கங்கள், சமூகத்தில் பழகுவதால் ஏற்படும் கெட்ட பழக்கங்கள் எல்லாவற்றையும், கொஞ்சி பேசி சரி செய்ய இயலாது. லைட்டாகவேணும் , பயமுறுத்துவதற்காகவேணும் திட்டியோ, அடி பயம் காட்டியேதான் சாரி செய்ய வேண்டியுள்ளது. நம் குழந்தையை வளர்க்க நமக்குத் தெரியாதா? நமக்கு வளர்க்கவே தெரிய வேண்டாம்.

குழந்தை தானாகவே நன்றாக வளரும். நாம் அதை தொந்தரவு செய்யாமல், தட்டிக்கொடுத்து ஷேப் செய்தால் போதும். நம்முடைய கெட்ட எண்ணங்கள், கெட்ட பழக்கங்கள், சூது வாது, கள்ளம் கபடம் குழந்தைகளை அண்டவிடாமல் பார்த்துக்கொண்டாலே முக்கால்வாசி பிள்ளை வளர்ப்பு முடிந்தது. நம் சமூகம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லிக்கொடுங்கள்.

யாரிடமும் வெறுப்பை வளர்க்காதீர்கள். எல்லோருடனும் பழக அனுமதிக்க வேண்டும். சாதி மத, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் வளர்கிறார்களா என்று உறுதி செய்யுங்கள். எல்லோரும், தன் குழந்தை மட்டுமல்லாமல் மற்ற குழந்தைகளையும் நம் குழந்தை என்று நினைக்க ஆரம்பித்து, அந்த மனப்பான்மை வந்தால் போதும். குழந்தை வளர்ப்பு எளிதாகி விடும்.