கடந்த காதலை வாழ்க்கை துணையிடம் கூறுவதால் ஏற்படும் சிக்கல்கள்!

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்று நம் முன்னோர்கள் பழங்காலம் முதலே நம்பி வருகின்றனர். அதனால்தானோ என்னவோ ஒருவரைக் காதலித்தாலும் பல சமயங்களில் விதி அவரை திருமணம் செய்ய அனுமதிப்பதில்லை. இன்றய சமூகத்தில் பெரும்பாலானோர் இடம் பொருள் பேதம் இன்றி காதல் வயப்படுவதும் அதன்பின் அது உடைந்ததால் மனம் நொடிந்து சில காலம் இருப்பதும் அதன் பின் மீண்டும் காதல்வயப்படுவதும் சுலபமாகத்தான் இருக்கிறது.

ஆனால் இவர்கள் திருமணம் செய்யும்போது பல எதிர்பார்ப்புகள் மற்றும் பாதுகாப்புகளை தங்கள் துணையிடம் தேடுவார்கள். அதே நேரத்தில் கடந்து போன காதலைப் பற்றி தங்கள் துணையிடம் தெரிவிக்க விரும்புவார்கள். இந்த பதிவில் கடந்த காதலை வாழ்க்கை துணையிடம் கூறுவதால் ஏற்படும் சிக்கல்களை தெரிந்துகொள்வோம்.

இன்றைக்கு பல திருமணங்கள் நீதிமன்ற வாசலில் நின்று கொண்டிருப்பதற்கு இந்தப் பழைய காதல் மற்றும் அது பற்றிய தவறான எண்ணங்கள் போன்றவைதான் காரணமாக இருக்கிறது. தன்னிடம் மறைத்து திருமணம் செய்துவிட்டதாக மற்றவர் கோபப்படுவதால் பிரச்னை பெரிதாகலாம். பொதுவாக பெண்கள் தாங்கள் செய்த அந்தக் காதல் பற்றி தன் கணவனிடம் யாரேனும் கூறிவிடுவார்களோ என்று பயபடுவார்கள். இந்த உறுத்தல் அவர்கள் மண வாழ்க்கையை பாதிக்கிறது. அதனால் நாமே இதனைக் கூறிவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

அதனால் பதட்டமாக உண்மைகளைக் கூறுகிறேன் என்று தங்கள் வாழ்வில் தாங்களே சிக்கலை ஏற்படுத்திக் கொள்வார்கள். நடந்த எல்லா விஷயங்களையும் அப்படியே சொல்லி பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டு இருப்பார்கள். இது தவறு. கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால் உங்களுக்கு முக்கியமான உறவென்பது நிகழ்க்காலத்தில் இருப்பவரோடுதான். இந்த உறவு நன்றாக நடந்தால்தான் எதிர்காலம் தெளிவாக இருக்கும். திருமணத்திற்கு பின்பான உங்கள் வாழ்வை எப்படி சரியாக வாழவேண்டும் என்பதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். கடந்த காலத்தை விட்டு விடுங்கள். அது தானாக மறைந்து விடும்.

உங்களை பற்றிய உண்மைகளை ஒளிவுமறைவின்றி அப்படியே பிரதிபலிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நம்மைப் பற்றிய பல விஷயங்கள் நமக்குத் தெரிவதில்லை. ஆகவே கடந்து போன காதல் உண்மைகளை அவரை எப்படி எல்லாம் நேசித்தீர்கள் என்பது பற்றியெல்லாம் நீங்கள் விளக்கத் தேவையில்லை.

எதிர்காலத்தில் நமது கடந்த கால ரகசியங்கள் யார் மூலமெனும் தெரிய வந்தால் என்ன செய்வது என்று பயப்படாமல் அதனை எதிர்கொள்வது எப்படி என்பதில் நீங்கள் உறுதியாக இருங்கள். பக்குவமாக அதனை நீங்கள் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கடந்த கால உண்மைகளை பற்றி ஒருவருக்கொருவர் சொன்னால்தான் மற்றவர் மீது நாம் உண்மையான நேசம் வைத்திருக்கிறோம் என்பது உண்மையல்ல. இதனை மற்றவரிடம் கேட்டு கொண்டிருக்காமல் இதனை அப்படியே விடுவதுதான் பெருந்தன்மையான அன்பை வெளிப்படுத்தும்.

பழைய காதலின் வடுக்களைத் தடவிப் பார்த்துக் கொண்டே இருப்பதால் உங்கள் புதிய உறவில் விரிசல்கள் ஏற்படும். கிடைக்காத ஒன்றை விட கிடைத்த ஒன்றையாவது நாம் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா. இப்போதும் இனிமேலும் நீங்கள் இருவரும் வாழப் போகிற வாழ்க்கைதான் உங்களுக்கு நிரந்தர உறவுகளை ஏற்படுத்தும். ஆகவே நீங்கள் இருவரும் உங்கள் இருவர் மீதான காதலில் திளைத்திருப்பதுதான் இப்போது முக்கியமானது.