ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்ததில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதற்கான டாஸ் சுண்டப்பட்டபோது, டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஜோஷ் பிலிப், தேவ் படிக்கல் களமிறங்கினர்.

படிக்கல் 5 ரன்னிலும், கேப்டன் கோலி 7 ரன்னிலும் வெளியேறினர். சற்று நிலைத்து நின்று ஆடிய பிலிப் 32 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர், 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 8 ரன்னிலும், சகா 39 ரன்னிலும், மணீஷ் பாண்டே 26 ரன்னிலும் அவுட்டாகினர். வில்லியம்சன் 8 ரன்னிலும் அபிஷேக் சர்மா 9 ரன்னிலும் வெளியேறினர்.

அடுத்து இறங்கிய ஜேசன் ஹோல்டர் 10 பந்தில் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆட்ட நாயகன் விருது சந்தீப் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்தது. இதனால், பிளே ஆப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.