20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி புதிய சாதனை

ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் ஆர்.சி.பி. அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செயதது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

பின்னர் 197 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 4 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் படிக்கல் ஆட்டமிழந்தார். அதேபோல் 13 ரன் எடுத்த நிலையில் அக்சர் பட்டேல் பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் வெளியேறினார். கேப்டன் விராட் கோலி சற்று நிலைத்து நின்று ஆடி 43 ரன் எடுத்த நிலையில் ரபாடா பந்து வீச்சில் அவுட் ஆனார்.

அதில் விராட்கோலி 10 ரன்னை எடுத்தபோது அவர் 20 ஓவர் போட்டியில் 9 ஆயிரம் ரன்னை தொட்டு புதிய சாதனை படைத்தார். 286 போட்டியில் விளையாடி அவர் இந்த ரன்னை எடுத்துள்ளார். 20 ஓவர் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்தார். சர்வதேச அளவில் 7-வது வீரர் ஆவார்.

விராட்கோலி 286 ஆட்டத்தில் 9 ஆயிரத்து 33 ரன் எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அவர் 5,524 ரன் எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். சமீபத்தில் ரோகித்சர்மா 5 ஆயிரம் ரன்னை எடுத்து ஐ.பி.எல்.லில் 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் 9 ஆயிரம் எடுத்த வீரர்கள் கிறிஸ்கெய்ல்(13,296 ரன்), போல்லார்ட் (10,370 ரன்), சோயிப் மாலிக் (9926 ரன்), மெக்குல்லம் (9922 ரன்), டேவிட் வார்னர் (9451 ரன்), ஆரோன் பிஞ்ச் (9646 ரன்), வீராட்கோலி (9033 ரன்) ஆகியோர் உள்ளனர்.