ஐபிஎல் போட்டியை நடத்த அனுமதி தர மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் 2020 டி20 லீக் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டி20- உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பில்லாததால் செப்டம்பர், அக்டோபரில் ஐபிஎல் லீக்கை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட், இலங்கை போன்ற நாடுகள் ஐபிஎல் 2020 டி20 லீக்கை எங்கள் நாட்டில் நடத்தலாம் என விருப்பம் தெரிவித்தன. இதுகுறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் கூறுகையில், ஐபிஎல் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும். எதுவாக இருந்தாலும் ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசிடம் ஐபிஎல் நிர்வாகம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா சூழலை கருதி செப்டம்பரில் இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடத்தப்படும் என்று கூறினார்.