முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு முட்டாள்தனமானது-கவுதம் கம்பீர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. டெல்லியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி மருத்துவமனைகளில் வேறு மாநிலங்களை சேர்ந்த நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசின் மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் டெல்லி மக்களுக்கே சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார் . இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பிற்கு பல்வேரு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும்,பா.ஜ.க. எம்.பியுமான கவுதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லி மருத்துவமனைகளில் பிற மாநில நோயாளிகளுக்கு இடமில்லை என்ற உத்தரவு முட்டாள்தனமானது, இந்தியா என்பது ஒன்று. நாம் இந்த தொற்றை ஒன்றிணைந்தே எதிர்த்துப் போராட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.