ரெய்னாவுக்கு பதிலான டேவிட் மாலனா? சென்னை அணி திட்டவட்டமாக மறுப்பு

திட்டவட்டமாக மறுப்பு... சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக டேவிட் மாலன் சென்னை அணியில் இணைய உள்ளதாக வெளியான தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவோடு இதுவரை 12 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடரானது இந்த மாதம் 19ம் தேதி துவங்க உள்ளது.

கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாததன் காரணமாக துபாயில் வைத்து ஐ.பி.எல் தொடரை நடத்த பி.சி.சி.ஐ., திட்டமிட்டு அதன்படி அதற்கான அட்டவணையையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மட்டும் குழப்பம் மட்டுமே நீடித்து வருவதாக தெரிகிறது.

சென்னை அணியில் இருந்து விலகிய சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக டேவிட் மாலன் சென்னை அணியில் இணைய உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்கள் மற்றும் கிரிக்கெட் இணையதளங்கள் என அனைத்திலும் காட்டுத்தீயாக பரவி வந்தது.

இந்தநிலையில், இந்த தகவல் வெறும் வதந்தி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள காசி விஸ்வநாதன், சிஎஸ்கேவில் ஒரு அணிக்கு அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கைக்கான கோட்டா ஏற்கனவே முழுமையடைந்து விட்டது. எனவே இன்னொரு வெளிநாட்டு வீரரை எப்படி அணியில் எடுக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை என்று டேவிட் மாலனை எடுப்பது குறித்த பரவிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.