சோமாலியாவின் அன்னை தெரசா என்று அழைக்கப்பட்ட டாக்டர் ஹாவா அப்தி மரணம்

ஆப்பிரிக்க நாடான சோமாலியா வறுமையாலும், உள்நாட்டுப்போராலும் தவித்து வருகிறது. இந்நிலையில் சோமாலியாவில் மனித நேய ஆர்வலராக வலம் வந்த டாக்டர் ஹாவா அப்தி நேற்று முன்தினம் மொகாதிசுவில் மரணம் அடைந்தார். 73 வயதுடைய ஹாவா அப்தி, தலைநகர் மொகாதிசுவுக்கு அருகே ஒரு ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், உணவு மையத்தை அமைத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வந்தார்.

சோமாலியாவில் 30 ஆண்டு கால உள்நாட்டுப்போரிலும் அங்கே இருந்து, தனது சேவைகளால் மக்களைக் கவர்ந்ததால் அவர் சோமாலியாவின் அன்னை தெரசா என்றழைக்கப்பட்டார். உள்நாட்டுப்போரால் இடம் பெயர்ந்த மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்தார்.

2011-ல் அவரது ஆஸ்பத்திரி, மத அடிப்படையிலான பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இருப்பினும், அங்கிருந்த நூற்றுக்கணக்கான உள்ளூர் பெண்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் பின்வாங்கினர். நேற்று முன்தினம் மொகாதிசுவில் ஹாவா அப்தி மரணம் அடைந்ததை, அவரது மகள் ஆமினா அப்தி உறுதி செய்தார்.

இதுகுறித்து சோமாலியா செய்தித்துறை அமைச்சகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஹாவா அப்தி, சோமாலியாவின் அன்னை. அவர் பாதிக்கப்பட்ட சோமாலியா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச ஆஸ்பத்திரியை நிறுவி சேவை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.