முதன்முறையாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்தது நியூசிலாந்து அணி

முதல்முறையாக முதலிடம்... நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மங்கானுவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்தது. பாகிஸ்தான் அணி 239 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சிறப்பாக ஆடிய பகீம் அஸ்ரப் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் லாதம் மற்றும் பிளெண்டல் ஆகியோர் அரை சதமடித்தனர்.

45.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 271 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 101 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 117 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து முதன்முறையாக கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.