ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான முதல் போட்டியை தவறவிடுகிறேன் - ஜோஸ் பட்லர்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று ஆரம்பித்தது. இதற்கு அனைத்து நாட்டு வீரர்களும் போட்டிக்கு தயாராகிவிட்டனர். ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே இங்கிலாந்தில் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்ததால் 36 மணி கோரன்டைன் இருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் இடம் பிடித்துள்ளார்.

ஜோஸ் பட்லர் குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளார். இதன் காரணமாக அவர் ஆறு நாட்கள் கோரன்டைன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் நடைபெறும் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான முதல் போட்டியை தவறவிடுகிறேன். ஏனென்றால், கோரன்டைன் இருக்க வேண்டியுள்ளது. நான் இங்கு குடும்பத்துடன் வந்துள்ளேன். எனது குடும்பத்துடன் வருவதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அனுமதி கொடுத்தது சிறந்த விசயம். இது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.