ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய தவான்

13 வது ஐ.பி.எல். போட்டி அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த போட்டியில் டெல்லி அணியில் உள்ள தொடக்க வீரர் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டு வருகிறார். இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தொடக்க வீரர் ஷிகர் தவான் மிகவும் அபாரமாக ஆடினார்.

நேற்றைய ஆட்டத்தில் தவான் 50 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் தவான் இந்த சீசனில் 600 ரன்னை தொட்டார். அவர் 16 ஆட்டத்தில் 603 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 106 ரன் எடுத்துள்ளார். 2 சதமும், 4 அரை சதமும் தவான் அடித்துள்ளார். அவரது சராசரி 46.38 ஆகும். ஸ்டிரைக் ரேட் 145.65 ஆகும்.

இன்னும் தவான் 68 ரன் எடுத்தால் லோகேஷ் ராகுலை முந்தி முதல் இடத்தை பிடிப்பார். இறுதிப்போட்டியில் தவான் அதை சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய ஆட்டத்தில் தவான் 78 ரன் எடுத்ததன் மூலம் ரோகித் சர்மாவை முந்தியுள்ளார்.

ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் தவான் 4-வது இடத்தில் உள்ளார். அவர் 174 இன்னிங்சில் 5,182 ரன் எடுத்து ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் ரோகித் சர்மா 194 இன்னிங்சில் 5,162 ரன்னுடன் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.