ஐ.பி.எல். கிரிக்கெட்டில் யார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு முன்னாள் வீரர்கள் பாராட்டுகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி அதன் மூலம் ஐ.பி.எல். போட்டிக்குள் நுழைந்தவர், 29 வயதான நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர். 2017-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட நடராஜன் அந்த ஐ.பி.எல்.-ல் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இதன் பிறகு 2018-ம் ஆண்டில் ரூ.40 லட்சத்திற்கு ஐதராபாத் அணி அவரை வாங்கியது.

2018 மற்றும் 2019-ம் ஆண்டு சீசனில் ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை. என்றாலும் தமிழக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தனது திறமையை வளர்த்துக் கொண்ட நடராஜன் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஸ்டம்பை குறி வைத்து யார்க்கராக போட்டு மிரட்டினார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நடராஜன் 4 ஓவர் பந்து வீசி 25 ரன் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். குறிப்பாக அவர் தனது கடைசி இரு ஓவர்களில் மட்டும் துல்லியமாக 10 யார்க்கர்களை வீசி திணறடித்தார். ஐதராபாத் அணியின் வெற்றியில் அவரது பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், நடராஜனின் பந்து வீச்சை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கடைசி கட்டத்தில் மிகச்சிறப்பான முறையில் நேர்த்தியாக யார்க்கர் வீசினார் என்று பாராட்டியுள்ளார். மேலும், ‘அற்புதம் நடராஜன்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.