அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல். டி020 லீக்கை பிசிசிஐ நிறுத்தக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தக்க குறைந்தபாடில்லை. இதனால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.நாளை மறுதினம் வீரர்கள் துபாய் புறப்பட்டுச் செல்லவுள்ளனர். ஐபிஎல் போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபு தாபியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியை நிறுத்த வேண்டுமென வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் லகூ என்பவர், ஐபிஎல் போட்டி வெளிநாட்டில் நடத்தப்பட்டால் இந்தியாவுக்கு பொருளாதாரம், வருவாய் இழப்பு ஏற்படும். அதனால் பிசிசிஐ தொடரை நிறுத்த வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், ஐபிஎல் அறக்கட்டளை நிகழ்ச்சி கிடையாது. கொரோனா தொற்று அனைத்து தொழில்துறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியை இந்தியாவில் நடத்தினால், பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். நாட்டிற்கு தற்போது இதுதான் மிகவும் அவசியமானது என்று தெரிவித்துள்ளார்.