இத்தாலியின் கால்பந்து ஜாம்பவான் பவுலோ ரோஸீ காலமானார்

இத்தாலியை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பவுலோ ரோஸீ உடல்நலக்குறைவால் காலமானார்.

கால்பந்து உலகில் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் நாயகன் என்று போற்றப்படுபவர் பவுலோ ரோஸீ (64). இத்தாலி நாட்டை சேர்ந்த இவர் ஸ்பெய்ன் நாட்டில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், 6 கோல்களை அடித்து அந்த போட்டியின் நாயகனாக இத்தாலி மக்களால் போற்றப்பட்டார்.

மேலும் வைசென்சா, ஜுவெண்டஸ் மற்றும் மிலன் உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக விளையாடி அதிக கோல்களை அடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்ததாக, அவரது மனைவி ஃபெடரிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகின் தலைசிறந்த 125 கால்பந்து வீரர்களில் பவுலோ ரோஸீயும் ஒருவர் என பிரேசில் கால்பந்து வீரர் பீலே இவரை கடந்த 2004 ஆம் ஆண்டு கவுரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.