ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முறையாக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த ஜடேஜா

ஐபிஎல் தொடரின் 14-வது ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையிலான அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கனர். வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது.

சென்னை அணியில் தீபக் சாஹர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் 8.2 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்ததால் ரவீந்திர ஜடேஜா முன்னதாகவே களம் இறங்கிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கேப்டன் டோனி மற்றும் ஜடேஜா ஜோடி சென்னை அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 34 பந்தில் அரைசதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், முதல் அரைசதம் ஆகும்.

இதற்கு முன் 2012-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 48 ரன்களும், 2011-ல் கேரளா அணிக்காக புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 47 ரன்களும், 2012-ல் சென்னை அணிக்காக புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 44 ரன்களும் அடித்துள்ளார். நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.