கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று மோதல்

ஐ.பி.எல். போட்டியின் 13-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது எந்த அணி என ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. 2-வது போட்டியில் பெங்களூர் அணியை 97 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் 223 ரன் குவிக்கும் ராஜஸ்தானிடம் தோற்றது. பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

கிறிஸ் கெய்லுக்கு இன்றைய ஆட்டத்திலாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரிக்கொடுத்த காட்ரெல் நீக்கப்படலாம். நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே.விடம் 5 விக்கெட்டில் தோற்றது. 2-வது போட்டியில் கொல்கத்தாவை 49 ரன்னில் வீழ்த்தியது. 3-வது போட்டியில் பெங்களூரிடம் சூப்பர் ஓவரில் தோற்றது.

மும்பை இந்தியன்ஸ்அணியில் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிசன், பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்டியா, குயின்டன் டிபாக், பும்ரா, போல்ட், பேட்டின்சன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் 24 முறை மோதியதில் மும்பை 13-ல். பஞ்சாப் 11-ல் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.