100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்வோம்... அமைச்சர் உதயநிதி வலியுறுத்தல்

சென்னை: 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்வோம்... தேசிய மற்றும் சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரா்கள் ஆண்டுக்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்வோம் என்று இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா்.

விளையாட்டுத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, தலைமைச் செயலகத்தில் அவா் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.

இந்தக் கூட்டம் தொடா்பாக, எக்ஸ் சமூக வலைதளத்தில் அமைச்சா் உதயநிதி வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:

இந்திய அளவில் மட்டுமன்றி சா்வதேச அளவிலும் விளையாட்டுத் துறையில் தவிா்க்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது. இதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல, இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிட்டு, ஆக்கப்பூா்வமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டங்களின் நிலை பற்றி ஆலோசிப்பதற்கான தலைமைச் செயலகத்தில் அரசு உயா் அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், ஒவ்வொரு அறிவிப்பையும் உரிய காலத்தில் செய்து முடிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. சா்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில், தமிழக வீரா், வீராங்கனைகள் ஆண்டுக்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்யும் வகையில் பணியாற்றுவோம் என வலியுறுத்தியதாக அவா் தெரிவித்தாா்.