முன்னாள் உலக சாம்பியன் இலங்கையை தோற்கடித்த நமிபியா கிரிக்கெட் அணி

மெல்பர்ன்: மெல்பர்ன் ஜீலோங் கார்டினியா பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 8வது ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆரம்பப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் நமிபியா வெற்றிகொண்டு வரலாறு படைத்தது.

இந்த வெற்றி மூலம் மிகவும் கடுமையான முதலாவது தடையை நமிபியா இலகுவாக கடந்து டி20 போட்டியில் தனது நம்பிக்கையை அதிகரித்துக்கொண்டது. அதேவேளை, இந்தத் தோல்வியினால் இலங்கை பெரும் அழுத்தத்தையும் நெருக்கடியையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

முதலாம் சுற்றில் (தகுதிகாண்) இலங்கையும் நமிபியாவும் ஏ குழுவில் இடம்பெறுகின்றன. இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் இலங்கையை விஞ்சும் வகையில் நமிபியா விளையாடி முழு கிரிக்கெட் உலகையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

நமிபியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 164 ரன்கள் என்ற ஓரளவு கடினமான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 108 ரன்கள் எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முன்னதாக முதலில் விளையாட அழைக்கப்பட்ட நமிபியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைக் குவித்தது.