அடுத்த ஆண்டு முதல் மீண்டும் பழைய நடைமுறை... பிசிசிஐ தலைவர் தகவல்

மும்பை: பிசிசிஐ தலைவர் தகவல்... ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணிலும் இதர நகரங்களிலும் விளையாடும் முறை அடுத்த வருடம் முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

மாநில சங்கங்களுக்கு கங்குலி அனுப்பியுள்ள கடிதத்தில் சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் சில:

கொரோனாவுக்கு முன்பு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது போல 2023 ஐபிஎல் போட்டி பழைய நடைமுறையில் நடத்தப்படும். அதன்படி 10 அணிகளும் பாதி ஆட்டங்களை சொந்த மண்ணிலும் (சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடுவது போல) மீதி பாதி ஆட்டங்களை இதர நகரங்களிலும் விளையாடவுள்ளன.

(இதனால் 2023 ஐபிஎல் போட்டியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடவுள்ளது. சென்னையில் கடைசியாக விளையாடி ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவேன் என தோனியும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.)

2023 தொடக்கத்தில் மகளிர் ஐபிஎல் தொடங்கப்படும். (மகளிர் டி20 உலகக் கோப்பை பிப்ரவரியில் முடிவடைவதால் மார்ச் மாதம் மகளிர் ஐபிஎல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.)

மகளிர் யு-15 போட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது பிசிசிஐ. இந்தப் போட்டி டிசம்பர் 26 முதல் ஜனவரி 12 முதல் பெங்களூர், ராஞ்சி, ராஜ்கோட், இந்தூர், ராய்பூர், புனே ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.