சுரேஷ் ரெய்னாவின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது ஆட்டம் நேற்று அபுதாபியில் நடைபெற்றபோது, மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி டாக், ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 45 பந்தில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

17 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி ஹர்திக், பொல்லார்டு ஜோடியின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பின்னர், 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஐ.பி.எல். தொடரில் 5,000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 3-வது வீரராக, தனது பெயரை பதிவு செய்துள்ளார். இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் சாதனைப் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா 38 அரைசதங்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். தற்போது ரோகித் சர்மா அவருடன் இணைந்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் டேவிட் வார்னர் 44 அரைசதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இந்த போட்டியில் ரோஹித் சர்மா 45 பந்தில் 70 ரன்கள் விளாசினார்.