மும்பை இந்தியன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றபோது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரோன் பிஞ்ச் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில் ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பவர் பிளே-யான முதல் ஆறு ஓவரில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் விளாசியது. 8-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆரோன் பிஞ்ச் 31 பந்தில் அரைசதம் அடித்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். விராட் கோலி பந்தை எதிர்கொள்ள மிகவும் திணறினார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். அதன்பின் படிக்கல் ஆட்டத்தில் வேகம் பிடித்தது. கடைசி ஓவரில் ஷவம் டுபே இரண்டு சிக்ஸ் விளாசி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டிகாக் களமிறங்கினர். மும்பை இந்தியன்ஸ் அணி 6.4 ஓவரில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உடானா வீசிய பந்தை பொல்லார்ட் பவுண்டரிக்கு விளாசினார். இதனால், மும்பை அணி 201 ரன்களை எடுத்தது. இரு அணிகளில் ஸ்கோரும் சமன் ஆனதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 6 பந்தில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் களமிறங்கினர். மும்பை அணியின் பும்ரா சூப்பர் ஓவரை வீசினார். கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விராட் கோலி பவுண்டரி எடுத்து அணியின் ஸ்கோரை 11 ரன்களாக உயர்த்தியதால், மும்பை இந்தியன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ராயல் சேலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது.