ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இலங்கை

துபாய்: இலங்கை கோப்பையை வென்றது... பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை 6-ஆவது முறையாக கைப்பற்றியது இலங்கை.

துபாயில் நேற்றிரவு நடைபெற்ற டி20 ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 170/6 ரன்களைக் குவித்தது. பானுகா ராஜபட்ச அபாரமாக ஆடி 71 ரன்களை விளாசினாா். இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. பிரமோத்4, ஹஸரங்க 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.


சூப்பா் 4 பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற பாகிஸ்தான்-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு துபையில் நடந்த இறுதிச் சுற்றில் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி தடுமாறியது. பதும் நிஸாங்கா 8, குஸாஸ் மெண்டிஸ் 0, தனுஷ்கா குணதிலகா 1, தனஞ்செய டி சில்வா 28, தஸுன ஷனகா 2 என சொற்ப ரன்களுடன் வெளியேற 58/5 ஸ்கோருடன் தடுமாறியது இலங்கை.

பானுகா ராஜபட்ச-வனின்டு ஹஸரங்க இணை மிடில் ஓவா்களில் நிலைத்து ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 36 ரன்களை விளாசி அவுட்டானாா் ஹஸரங்க. மறுமுனையில் அபாரமாக ஆடிய பானுகா 3 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 71 ரன்களை விளாசி அரைசதம் விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். சமிகா கருணரத்னேவும் 14 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

இலங்கை 170/6: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 170/6 ரன்களைக் குவித்தது இலங்கை. ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்: பாக். தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ரவுஃப் 3/29 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.


தனது 50-ஆவது டி20 விக்கெட்டையும் பதிவு செய்தாா் ரவுஃப். 171 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் வீரா்களால் இலங்கை பௌலா்களின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினா். தொடக்க பேட்டா் முகமது ரிஸ்வான் 55 (1 சிக்ஸா், 4 பவுண்டரி), இப்திகாா் அகமது 32 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை எடுத்தனா்.

ஏனைய வீரா்கள் ஒற்றைய இலக்க ரன்களோடு வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா். 20 ஓவா்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான். இலங்கை தரப்பில் பிரமோத் மதுஷன் 4, ஹஸரங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.