பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என பேசிய பா.ஜ.க எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய பிரதேச மாநிலத்தில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வந்தது. அதன்பின் காங்கிரஸுக்கு எதிராக ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடி உயர்த்தியதின் விளைவால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின் அங்கு சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பா.ஜ.க. அரசு பதவிக்கு வந்தது.

ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி, அவருடன் பா.ஜ.க.வில் சேர்ந்தனர். தற்போது அந்த மாநில சட்டசபையில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. அரசு பெரும்பான்மை பலம் பெற இந்த தேர்தல் வெற்றி உதவும் என்ற நிலையில் அங்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பா.ஜ.க எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, கை சின்ன பட்டனை, அழுத்தி காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று பழக்கதோஷத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசியது அவருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

அதன்பின், சுதாரித்துக்கொண்ட ஜோதிராதித்ய சிந்தியா தனது தவறை திருத்திக்கொண்டார். இது தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை அமைக்க காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.