ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய டெல்லி அணி 189 ரன்கள் குவிப்பு

அதிரடியாக விளையாடிய டெல்லி கேப்பிடல் 189 ரன்களை குவித்தது. இதையடுத்து ஹைதராபாத் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஸ்கோர் அதிக வேகத்தில் உயர்ந்தது.

டெல்லி 8.2 ஓவரில் 86 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட் இழந்தது. ஸ்டாய்னிஸ் 27 பந்தில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். தவான் 26 பந்தில் அரைசதம் அடித்தார்.

அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 21 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்கோர் 200 ரன்னைத் தொடும் வகையில் சென்றது. ஆனால், 19-வது ஓவரில் தவான் 50 பந்தில் 78 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

கடைசி ஓவரில் நடராஜன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. ஹெட்மையர் 22 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.