மூன்றாவது போட்டியையும் தனதாக்கிய இந்திய கிரிக்கெட் அணி

திருவனந்தபுரம்: தொடரை முழுமையாக கைப்பற்றியது... இந்தியாவுடனான இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்ற இந்திய அணி ஒருநாள் போட்டியில் ஏற்கனவே 2-0 என தொடரில் முன்னிலை வகித்திருந்தது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மன் கில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 85 பந்துகளில் சதத்தினை நிறைவு செய்தார். ஏ.எல்.ராகுல் 7 ரன்களும், ஸ்ரேயஷ் ஐயர் 38 ரன்களும், சூர்யகுமார் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 166* ரன்களை அடித்து அசத்தினார். இதில் 8 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும். இலங்கை அணி சார்பில் கசுன் ரஜிதா, லஹிரு குமார தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதன்பின், 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்கை எதிர்த்து இலங்கையின் துவக்க ஆட்டக்காரர்களாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ, நுவானிடோ ஃபெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கினர். ஆனால், இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின், அடுத்தடுத்த பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 22 ஓவர்கள் முடிவில் 73 ரன்களை மட்டுமே எடுத்து 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்தியத் தரப்பில் சிராஜ் 4 விக்கெட்களையும் முகமது ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.