தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் - ஆகாஷ் சோப்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தற்போது பேட்டி ஒன்று அளித்தபோது, இந்திய கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் உயர்மட்ட அளவிலான போட்டிகளுக்கு வீரர்களின் உறவினர், நிர்வாகிகளின் சொந்த பந்தம் என்ற அடிப்படையில் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதை நான் பார்த்ததில்லை. அப்படி ஒருபோதும் நடக்காது என்று கூறியுள்ளார்.

குறிப்பிட்ட ஒருவரின் மகன் அல்லது உறவினர் என்பதற்காக ஐ.பி.எல். போட்டியில் எந்தவொரு வீரருக்கும் ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் மகன் என்பதற்காக ரோகன் கவாஸ்கர் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடிவிடவில்லை. பெங்கால் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடியதால் தான் அவர் இந்திய அணிக்கு தேர்வானார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தெண்டுல்கரின் மகன் என்பதால் அர்ஜூன் தெண்டுல்கருக்கு எதுவும் தட்டில் வைத்து வழங்கப்படவில்லை எனவும், இந்திய அணிக்குள் அவரால் எளிதில் நுழையமுடியவில்லை. கீழ்மட்ட அளவிலான போட்டிகளில் வேண்டுமானால் சில சம்பவங்கள் நடந்து இருக்கலாம் எனவும் கூறினார்.

19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் கூட இதுபோன்ற பயனற்ற தேர்வுகள் நடைபெறுவதில்லை என்றும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.