இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் தவிக்கும் இலங்கை அணி

வெலிங்டன்: இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ் ஜோடியின் இரட்டை சதத்தால் 4 விக்கெட்டுக்கு 580 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. 3வது நாளான நேற்று, தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 66.5 ஓவரில் 164 ரன்னில் சுருண்டு ‘ஃபாலோ ஆன்’ ஆனது. கேப்டன் திமுத் கருணாரத்னே 89 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல், மாட் ஹென்றி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 416 ரன்கள் பின்தங்கிய நிலையில், ‘ஃபாலோ-ஆன்’ பெற்ற இலங்கை, 2வது இன்னிங்சில் தொடர்ந்து பேட்டிங் செய்தது. நேற்றைய முடிவில் 43 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்தது.

கேப்டன் கருணாரத்னே (51 ரன்கள்), குசல் மெண்டிஸ் (50 ரன்கள், நாட் அவுட்) அரைசதம் அடித்தனர். ஆட்டத்தின் 4-வது நாள் இன்று. இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இலங்கைக்கு இன்னும் 303 ரன்கள் தேவை, இந்த டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.