தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு விஜயகாந்த் பாராட்டு

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நடராஜனின் கதை அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என ஹர்திக் பாண்டியா தெரிவித்த நிலையில் தேமுதிக தலைவர், நடிகர் விஜயகாந்த் நடராஜை வாழ்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், சர்வதேச போட்டியில் வெற்றி பயணத்தை தொடங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள். இனிவரும் விளையாட்டுப் போட்டில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நடராஜனின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்த சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜனுக்கு வாழ்த்துகள். மட்டைப் பந்து போட்டிகளில் அவர் புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழக முதல்வர், தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் நடராஜனைப் பாராட்டி வருகின்றனர்.