சரியாக 7.29 மணிக்கு தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட என்ன காரணம்?

கடந்த 15ஆம் தேதி இந்திய நாடே சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது சரியாக இரவு 7.29 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஓய்வு முடிவை தல தோனி அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள், இந்நாள் கிரிக்கெட் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், அனைத்து மாநில முதல்வர்கள் என பலரும் தோனியின் ஓய்வு முடிவு குறித்த தங்களது கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தோனி சரியாக 7.29 மணிக்கு ஓய்வு அறிவிப்பை வெளியிட என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் தோனி ரன் அவுட் மூலம் விக்கெட்டை இழந்தார் என்பதும் அவரது விக்கெட் இழப்பிற்கு பின் இந்தியாவின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் கடைசி விக்கெட்டாக சாஹல் ஆட்டமிழந்து இந்தியா தோல்வி கண்ட நேரம் சரியாக 7.29 மணி தான். இந்த போட்டி தான் தோனி விளையாடிய கடைசி போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனைக் குறிப்பிடும் வகையில்தான் தோனி சரியாக 7.29 மணிக்கு தனது ஓய்வு முடிவை அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.