20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறுமா ?

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த போட்டி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தால் கூட அங்கு போட்டி நடைபெறுவது கடினம் தான். திட்டமிட்டபடி இந்த கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டியை அடுத்த ஆண்டு நடத்த விரும்புகிறது. ஆனால் 2021-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளிப்போனால், இந்த பிரச்சனை சரியாகி விடும். ஆனால் இதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போர்டு நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து இந்த கூட்டத்தின் முடிவில் தெரிய வரும்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கூறுகையில், 20 ஓவர் உலக கோப்பை போட்டி விஷயத்தில் தொடர்ந்து இழுத்தடிக்காமல் விரைவில் தெளிவான முடிவு மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் அடுத்த கட்ட திட்டமிடலில் கவனம் செலுத்த முடியும் என்று கூறியுள்ளார்.