பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடைபெறும் - சவுரவ் கங்குலி அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால் ஒத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதற்குமுன் பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலால் பெண்கள் சேலஞ்சர் கிரிக்கெட் இந்த முறை நடத்தப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகின்றது. தற்போது இந்த போட்டி நடைபெறும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று கூறுகையில், பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், இந்திய வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், 3 அணிகள் இடையிலான இந்த போட்டி நவம்பர் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.