சில்லென்ற காற்று, அருவி குளியல், படகு சவாரி செல்ல சிறந்த இடம்!!!

ஆஹா இதோ இங்கேயே இருக்கே அருமையான சுற்றுலா தலம். எங்கே என்கிறீர்களா. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில்தான். சில்லென்ற காற்றும், அருவி குளியலும் மனதை ஈர்க்கும்.

ஆத்தூர் முல்லைவாடி சாலையில் 15கி.மீ தொலைவில் முட்டல் கிராமம் அமைந்துள்ளது. முட்டல் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் ஆணைவாரி என்ற பகுதியில் எழில்மிகு அருவி அமைந்துள்ளது.

இந்த அருவியில் அதிக நீர் கொட்டுவதாலும், வனத்துறையின் சிறப்பு ஏற்பாடுகளாலும், அதிக அளவில் சுற்றுலா பயணிகளை குறிப்பாக மேற்கு மாவட்டங்களிலிருந்து ஈர்க்கிறது. வனத்துறை இந்த எழில்மிகு அருவி பகுதியை ஒரு சிறந்த சுற்றுலா தளமாக மேம்படுத்தி இந்த அருவியின் சுற்றுபகுதிகளையும் சிறந்த முறையில் பராமரித்து வருகிறது.

கல்வராயன் மலைப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களிலும் நல்ல மழைப்பொழிவைப் பெறுகின்றன. இந்த நீர் வழிந்தோடி ஆணைவாரி அருவியில் விழுந்து அருகில் உள்ள முட்டல் கிராம ஏரியில் சேகரமாகிறது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக படகு சவாரி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வனத்துறை இந்த ஏரியிலிருந்து நீர் அருவிக்கு செல்ல வசதிகள் செய்துள்ளது. படகு சவாரியின்போது, பாதுகாப்பு அம்சங்கள் எடுக்கப்பட்டிருப்பதுடன், உயிர்காக்கும் கவச உடைகளும் வனத்துறையினரால் வழங்கப்படுகிறது.

வனத்துறையினரால் ஏரியின் கரை அருகிலேயே தங்கும் அறைகள் கட்டப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு நியாமான வாடகைக்கு வழங்கப்படுகிறது. குறைந்த செலவில் நிம்மதியாக குளியம், படகு சவாரி, ஓய்வு என்று எடுத்து உங்கள் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வை ஊட்டுங்கள்.