மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பிரதான சுற்றுலாத்தலங்களுள் ஒன்று மாமல்லபுரம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் 8 மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்பு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் சென்று வந்தனர். இருப்பினும் மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்களை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்கள் வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி அளித்திருந்த நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்களும் நேற்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டது.

ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தபிறகு, முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. கட்டண கவுண்ட்டர்களில் பணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறமுடியாது என்பதால் நேற்று வந்த பயணிகள் ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி அங்குள்ள பார் கோடு பலகையில் ஸ்கேன் செய்து அதனை புராதன சின்ன நுழைவு வாயில் மையங்களில் காண்பித்து புராதன சின்னங்களை கண்டுகளித்தனர்.

முதல் நாளான நேற்று குறைவான பயணிகளே காணப்பட்டனர். குறிப்பாக 8 மாதங்களுக்கு பிறகு வந்த பயணிகள் பலர் மகிழ்ச்சியுடன் புராதன சின்னங்கள் முன்பு தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.