விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். ஆனால் இந்த ஆணடு கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

கன்னியாகுமரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி கடந்த 10-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் நேற்று காலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காணவும், மாலையில் சூரியன் மறையும் காட்சியை காணவும் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கடற்கரையில் சிறுவர்-சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் இரு சக்கர வாகனங்கள், கார், பஸ் ஆகியவற்றில் வந்து குவிந்ததால், கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் போதுமான போலீசார் இல்லாததாலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து போலீசாரும் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.