கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
By: Nagaraj Mon, 23 Jan 2023 09:17:24 AM
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலையில் உள்ள ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 எலுமிச்சம் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மூலவரான 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 எலுமிச்சை பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கோடைக்கால வறட்சியால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியும், டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும் பக்தர்கள் வழிபாடு செய்தனா். முன்னதாக உற்சவர் ராமர், லெட்சுமணர், சீதை, அனுமனுக்கு கவசம் அணிவிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராமன், மோகன் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் பிரசித்தி பெற்ற தஞ்சை மேலவீதி மூலை அனுமார் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இக்கோவிலின் கருவறையில் மூலை அனுமார் கிழக்கு நோக்கியபடியும், முகம், கால்கள் வடக்கு நோக்கியும் அமைத்திருப்பது தனி சிறப்பாகும்.
மேலும், அனுமாரின் தலைக்கு மேல் அமைந்துள்ள வாலில் சனீஸ்வரபகவான் உள்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை ஒட்டி சாமிக்கு தேங்காய் துருவலால் அபிஷேகமும், பாலாபிஷேகமும் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வாழைப்பழ அலங்காரமும், 1,008 எலுமிச்சம் பழங்களால் மாலையும் அணிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.