பிளஸ் 2 துணைத்தேர்வு திட்டமிட்டபடி இன்று நடைபெறும் .. அரசு தேர்வுகள் இயக்ககம்
By: vaithegi Mon, 19 June 2023 09:41:24 AM
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் மொத்தம் 94.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பொதுத்தேர்வில் தோல்வியடைந்த தேர்வர்களுக்கு ஜூன் 19( இன்று ) முதல் 26-ம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு இடையே 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு கடந்த ஜூன் 14-ம் தேதி (புதன்கிழமை) முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இன்று தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வர்கள் ஆயத்தமாகி வந்த நிலையில், நள்ளிரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து கொண்டு வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதற்கு இடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் , ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து கொண்டு வருகிறது.
இதனால் இம்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் துணைத்தேர்வு நடைபெறுமா என்று மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று பிளஸ் 2 துணைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்து உள்ளது.