மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர கால அனுமதி
By: Nagaraj Tue, 06 Sept 2022 5:38:44 PM
புதுடில்லி: அவசர கால அனுமதி... மூக்கு வழியாக செலுத்தும் நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
'பிபிவி154' என்ற மூக்குத் துவாரம் வழியே செலுத்தப்படும் கொரோனா மருந்துக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று பாரத் பயோடெக் நிறுவனம் சோதனை செய்தது.
இந்நிலையில், சோதனை செய்த தரவுகளை சமர்ப்பித்து மூக்கு வழி செலுத்தக்கூடிய கொரோனா மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
சோதனைகளில் இது பாதுகாப்பானது என்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது என்றும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய அரசு அவசர கால அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.