Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூட்கேசில் மறைத்து ரூ. 5½ கோடி போதை பொருள் கடத்த முயற்சி; ஒருவர் கைது

சூட்கேசில் மறைத்து ரூ. 5½ கோடி போதை பொருள் கடத்த முயற்சி; ஒருவர் கைது

By: Monisha Sat, 05 Dec 2020 2:25:24 PM

சூட்கேசில் மறைத்து ரூ. 5½ கோடி போதை பொருள் கடத்த முயற்சி; ஒருவர் கைது

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடான சார்ஜாவுக்கு தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. இன்று காலை 4.10 மணிக்கு ஏர் அரேபியா விமானம் சார்ஜாவுக்கு புறப்பட தயாராக இருந்தது. சார்ஜாவுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் விமான நிலையத்துக்கு வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அவர்களது உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது திருச்சி மாவட்டம் துவாகுடியை சேர்ந்த நாகரத்தினம்(வயது 44) என்பவரது நடவடிக்கை மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அவரது சூட்கேசை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஸ்கேனர் உதவியுடன் சோதனை செய்தனர். சோதனையில் நாகரத்தினம் சூட்கேசுக்கு அடிப்பகுதியில் மெத் எனப்படும் போதைப்பொருளை மறைத்து வைத்து விமானத்தில் சார்ஜாவுக்கு கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

airport,passengers,scanner,drug,smuggling ,விமானநிலையம்,பயணிகள்,ஸ்கேனர்,போதைப்பொருள்,கடத்தல்

சூட்கேசில் இருந்து இரண்டு பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 1¼ கிலோ மெத் போதை பொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். சர்வதேச அளவில் இதன் மதிப்பு ரூ. 5½ கோடி என்பது தெரிய வந்தது. பின்னர் நாகரத்தினத்தை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது நாகரத்தினம் பாதுகாப்பு படையினரிடம் கூறியதாவது:- நான் சார்ஜாவுக்கு செல்வதற்காக வந்தேன். அப்போது விமான நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டு இருந்த நண்பர் ஒருவர் என்னிடம் இந்த பெட்டியை கொடுத்தார். அவர் கொடுக்கும் போது இது காலி பெட்டி என கூறினார். மேலும் நீங்கள் முன்னால் செல்லுங்கள் நான் பின்பு வருகிறேன் என்று கூறினார். பெட்டியில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது என கூறினார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நாகரத்தினத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags :
|