Advertisement

27-ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

By: Monisha Thu, 17 Dec 2020 11:46:47 AM

27-ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ம் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இது குறித்து கோவையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் எம். குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- வேக கட்டுப்பாட்டு கருவி அனைத்து லாரிகளுக்கும் பொறுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் அனுமதி பெற்ற 49 நிறுவனங்கள் உள்ளன. ஆனால் தமிழக அரசு இக்கருவிகளை குறிப்பிட்ட 12 நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

எங்களது சம்மேளனம் சார்பில் இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதில் மத்திய அரசு அனுமதி அளித்த நிறுவனங்களில் எங்கு வேண்டுமானாலும் இக்கருவிகளை பெற்றுக்கொள்ள தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே போல் ஒளிரும் பட்டை ஒட்ட வேண்டும். ஏற்கனவே ஒட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட 2 நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என அரசு கூறுகிறது. ரூ 600-க்கு வாங்கப்படும் ஒளிரும் பட்டைகள் அந்த நிறுவனங்களில் வாங்கினால் ரூ.5000 வரை செலவாகிறது.

lorry,corruption,demands,lawsuit,strike ,லாரி,ஊழல்,கோரிக்கைகள்,வழக்கு,வேலை நிறுத்தம்

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள அனைத்து நிறுவனங்களிலும் இதனை வாங்க அனுமதிக்க வேண்டும். ஜி.பி. எஸ். கருவிகள் வாங்க 140 கம்பெனிகள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட 8 கம்பெனிகளிடம் வாங்க அரசு கூறுகிறது. இதனால் ரூ.3 ஆயிரம் விலை என்றால் அந்த கம்பெனிகளில் ரூ. 15 ஆயிரம் விலை கூறுகிறார்கள்.

போக்குவரத்து துறையில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. சமீபத்தில் ஆர்.டி.ஒ சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நன்றி. பெட்ரோல் பங்குகளில் நிற்கும் லாரிகளுக்கு கூட அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை காவல்துறையினர் முறைப்படுத்த வேண்டும். டீசல் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறுகிறது. இதனை தடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தென் இந்திய மோட்டார் காங்கிரஸ் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அன்றைய தினம் வெளிமாநில லாரிகளும் தமிழ்நாட்டுக்கு வராது. இங்கிருந்தும் லாரிகள் செல்லாது. டெம்போ உள்ளிட்ட சிறு வாகனங்களும் வேலை நிறுத்தத்தில் கலந்துக்கொள்ள அதன் உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என அவர் கூறினார்.

Tags :
|