Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

By: Monisha Sat, 26 Dec 2020 3:39:42 PM

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க மாடுகளை தயார்படுத்துவதில் சுணக்கம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில் உரிய கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என தமிழக அரசு அனுமதி அளித்தது. போட்டிகளில் 300 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும், 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்த வேண்டும். வீரர்கள், பார்வையாளர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

jallikkattu,corona,control,bullock,training ,ஜல்லிக்கட்டு,கொரோனா,கட்டுப்பாடு,காளைமாடு,பயிற்சி

ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் வருகிற 14-ம் தேதியும், பாலமேட் டில் 15-ம் தேதியும், அலங்காநல்லூரில் 16-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்க உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, மேலூர், கொட்டாம்பட்டி, அவனியாபுரம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காளை வளர்ப்போர் தங்களது காளைகளுக்கு பிரத்யேக பயிற்சி அளித்து வருகின்றனர். காளைகளுக்கு வழக்கத்தை காட்டிலும் கூடுதலான சத்தான உணவுகளுடன், தினமும் பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் வழங்கி வருகின்றனர்.

காளைகளை பிடிக்கும் வீரர்களிடமிருந்து தப்பிக்க ஓட்டப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் வீரர்களை தாக்குவதற்கு வசதியாக மண்ணை குத்தும் பயிற்சி, இளைப்பு ஏற்படாமல் இருக்க மூச்சுப்பிடிப்பதற்கு நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் பங்கேற்க காளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

Tags :
|