அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட வாய்ப்பு
By: Karunakaran Mon, 15 June 2020 12:48:10 PM
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனால் இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் இந்த தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடவுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு மாகாண வாரியாக நடந்த ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் ஜோ பிடன் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தார். கொரோனா வைரஸ் தாக்கம், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் இழப்புகள் மற்றும் கருப்பின மக்களின் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அமைதியின்மை ஆகியவை இந்த ஜனாதிபதி தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
ஜோ பிடன் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று கூறி, தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதே நேரத்தில் தன்னுடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நபரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்வேன் என ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். கருப்பினப் பெண் ஒருவரை துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்வதில் ஜோ பிடன் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்காக இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ், மாசசூசெட்ஸ் செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய சூசன் ரைஸ் என 6 பேரிடையே கடும் போட்டி நிலவுகிறது. கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் கமலா ஹாரிஷ் போட்டியில் இருந்து விலகி ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அவர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படலாம்.