சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
By: vaithegi Sat, 30 Sept 2023 2:37:48 PM
சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அமைச்சர் பொன்முடியுடன் அவரது மனைவி விசாலாட்சி , பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சிகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் மணிவண்ணன் , அறங்காவலர் நந்தகோபால் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 66 மதிப்பிலான முரணான சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என போதிய ஆதாரமில்லை என்று கூறியும் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிந்த நிலையில் கடந்த மாதம் 10ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. பொன்முடி விடுதலை செய்யப்பட்ட வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளேன். என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த நிலையில் செப்டம்பர் 7-ம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் பொன்முடி பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.இதை தொடர்ந்து மீண்டும் அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு சொத்துக் குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதை எதிர்த்து, அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளார். வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் .